திங்கள், மார்ச் 05, 2012

சில கறுப்பு கவுன் கொலைக்காரர்கள்.




சட்டத்தின் துணை கொண்டு ஆட்டம் போடும் சிலப்பல வழக்கறிஞர்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பதை பெங்களுரூ விவகாரம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இடத்தில் காவல்துறையும், சட்டத்தை காக்கும் இடத்தில் இருப்பது நீதிமன்றம். ஆனால் இன்றைய நிலையில் கறுப்பு அங்கி அணிந்தவர்கள் மனதிலும் இருட்டு அப்பிக்கிடக்கிறது. அவர்கள் போராட்டம் என்ற பெயரில் நீதிமன்றத்தை புறக்கணிப்பது, நீதியின் பெயரை கொண்டு பிரச்சனை செய்வது என பெரும்பாலான வழக்கறிஞர்கள் இதையே தொழிலாக கொண்டுள்ளார்கள். 

இவர்கள் செய்யும் போராட்டங்கள் நேரடியாக மக்களை தான் பாதிக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள், நீதிபதிகளின் பற்றாக்குறையால் வழக்குகள் ஆண்டுக்கணக்கில், தலைமுறை மாறியும் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்தும் கவலப்படாமல் உள்ளனர் வழக்கறிஞர்கள். 

லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் வழக்கறிஞரை பிடித்தால் சாலைமறியல், நீதிமன்ற புறக்கணிப்பு என்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தானே என சிறிதும் யோசிப்பதில்லை. 

பெங்களுரூவில் நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியபோது சட்டத்தை காக்கும் இடத்தில் உள்ள காவல்துறையினர் வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்தியும், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பும் தந்துள்ளனர். ஆனால் சட்டத்தை அதிகமாக மதிக்க வேண்டிய வழக்கறிஞர்கள் பாதுகாப்பு தந்த காவலர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒரு காவலர் இறந்து போனார். 

இதற்கு யார் பொறுப்பு ?. 

பாதுகாப்பு தந்ததை தவறு என்கிறார்களா நீதிமான்கள். வழக்கறிஞர்கள் எது செய்தாலும் அதை சட்டத்தின் துணை கொண்டு தப்பிவிடுவார்கள். அதை மக்கள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைப்பது முட்டாள் தனம்மில்லையா?. 

மீடியாக்கள் எங்களை தவறாகவே காட்டுகிறது என வழக்கறிஞர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. தவறு செய்வதை தான் மீடியாக்கள் வெளிச்சத்துக்கொண்டு வருகின்றன. தவறான செய்தியென்றால் அந்த மீடியா மீது வழக்கு போட்டுயிருக்கலாம். அது சட்டம் படித்த அவர்களுக்கு தெரியும். ஆனால் தவறு செய்வது உண்மை என்பது அவர்களுக்கும் தெரிந்ததால் தான் சட்டத்தின் வழி செல்லாமல் அக்கிரம வழியை தேர்ந்தெடுத்து போராட்டம் செய்வது, பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கொலை செய்வது என்பது மன்னிக்க முடியாதது. கறுப்பு கவுன் போட்ட கொலைக்காரர்கள் சிலரால் நேர்மையாக, நீதியுடன், மனசாட்சிக்கு பயந்து தொழில் புரியும் பலாயிரம் வழக்கறிஞர்களுக்கு அவப்பெயர். 

சில ஆண்டுகளுக்கு முன் சட்டகல்லூரி மாணவர்கள் மோதலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதலின் போது வழக்கறிஞர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி நீதிபதிகள் கண்டித்தபோது கண்மூடிக்கொண்டு எதிர்த்தனர் சிலப்பல வழக்கறிஞர்கள். 

இதனால் மக்கள் மத்தியில் தங்கள் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைக்கப்போவது எப்படி ?. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக