வெள்ளி, ஜனவரி 06, 2012

பிணத்திலும் பணம் பார்க்கும் மருத்துவர்கள்.

இரண்டு தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் செய்யும் வேலை நிறுத்தத்தை காணும் போது இவர்களுக்கு சங்கம் வைக்க அனுமதி தந்த அரசாங்கத்தை தான் குற்றம் சொல்ல வேண்டியிருக்கிறது. காவல்துறைக்கு எப்படி சங்கம் வைக்க அனுமதியில்லையோ அதேபோல் இவர்களுக்கும் சங்கம் இருக்ககூடாது. சங்கம் என்பது அடிப்படை உரிமை என்று கூறலாம். ஆனால் கடந்த 3 தினங்களாக மக்கள் அடைந்த துன்பத்தை காணும்போது இப்படி தான் செய்ய வேண்டும் என தோன்றுகிறது. 

தூத்துக்குடியில் அரசின் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சேதுலட்சுமி, அதே தூத்துக்குடியில் தனியாக சுபம் கிளினிக் நடத்தி வருகிறார். தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டும் மகேஷ் தனது மனைவி நித்யா கர்ப்பமானது முதல் அந்த கிளினிக்கில் தான் செக்கப் செய்து வருகிறார். டிசம்பர் 30ந்தேதி அவருக்கு வயிற்று வலி வர சிகிச்சைக்காக அதே சுபம் கிளினிக்குக்கு கொண்டு வந்தள்ளார். குழந்தை வயிற்றில் இறந்துள்ளது ஆப்ரேஷன் செய்ய வேண்டும் உடனே பணம் கட்டு என்றதால் பணம் கட்டியுள்ளார். ஆப்ரேஷனின் போது நித்யாவின் உடல் மோசமாகிவிட வேறு ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லனும் பணம் ரெடி செய் என்றுள்ளார்கள். தாமதமாக பணம் ரெடி செய்துக்கொண்டு வர அதன்பின்பே கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் நித்யா இறந்துபோய்விட்டார். 

தன் மனைவியின் மீது அதிக பாசம் கொண்ட அந்த கணவன், உன்னால தான் என் மனைவி இறந்தா உன்னை விடமாட்டான் எனக்கூறிவிட்டு மனைவியின் உடலை எடுத்து வந்து அடக்கம் செய்கிறான். என்னை மிரட்டனான் என டாக்டர் சேதுலட்சுமி காவல்துறையில் புகார் தருகிறார். ஆனால் போலிஸ் முந்தும் முன்பே மருத்துவர் சேதுலட்சுமியை கடந்த 2ந்தேதி அவரது சொந்த கிளினிக்கில் வைத்து மகேஷ் அவரது நண்பர்கள் இருவர் வீச்சரிவாளால் பொலி போட்டுவிட்டு போய்விடுகின்றனர். 

இந்த கொலையை கண்டித்தும், பாதுகாப்பு கேட்டும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். சக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார், எங்களுக்கு என்ன பாதுகாப்பு என மருத்துவர்கள் கேட்பது நியாயம். அதேபோல் மனைவியின் உயிர் அந்த இளைஞனுக்கு ரொம்ப முக்கியம். அவன் போராடவில்லை. சட்டம் என்பது பணக்காரனுக்கு மட்டும் தான் என அவனுக்கு தெரிந்த முறையில் தண்டனை தந்துவிட்டார். கொலை குற்றம் சாட்டப்படுகிறானோ, அதேபோல் இறந்த மருத்துவர் மீதும் தவறு இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எல்லோரும் பேச மறுக்கிறார்கள். 

இந்த விவகாரத்தை அரசு மருத்துவர்களுக்கான பிரச்சனையாக முதலில் மாற்றியதே தவறு. இறந்து போனது அரசு மருத்துவர் ஆனால் கொல்லப்பட்டது அவரது சொந்த கிளினிக்கில் அதனால் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதே தவறு. 

மனசாட்சி உள்ள மருத்துவர்கள் ஒரு 10 நிமிடம் உண்மையாக யோசித்து பாருங்கள். நீங்கள் செய்யும் தவறு உங்களுக்கு புரியும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள்க்கு ஆயிரங்களில், லட்சங்களில் சம்பளம் தருகிறது. 8 மணி நேரம் தான் அவர்களுக்கு பணி. ஆனால் பணிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. தாமதமாக வரும் பெரும்பாலான மருத்துவர்கள் காத்திருக்கும் ஏழை நோயாளியை சரியாக கவனிப்பது கூடயில்லை. சார் உடம்பு சரியில்ல, இரண்டு நாளா இரும்பல் எனச்சொல்லும்போதே போ போய் ஊசி போட்டுக்க, மாத்திரை வாங்கிக்க என சீட் எழுதி தரும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஏராளம், ஏராளம். 

அதைவிடக்கொடுமை அரசு மருத்துவமனைகளில் இரவு பணி நேர மருத்துவர்கள் இரவு 11 மணிக்கு மேல் இருப்பதில்லை. அவர்களுக்கென ஒய்வு அறையில் ஏசி போட்டுக்கொண்டு படுத்துவிடுகிறார்கள். ரொம்ப ரொம்ப அவசரமான கேஸ் என்றால் மட்டும் தயங்கி தயங்கி போய் அழைக்கும் நர்ஸ்சிடம் கோபப்பட்டுக்கொண்டே வரும் மருத்துவர் உயிருக்கு போராடுபவரை பார்த்துவிட்டு அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டும் போ என அனுப்பிவைக்கும் நிலையில் தான் உள்ளார்கள். பல அரசு மருத்துவககல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் பணிக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பிரமாண்டமாக கட்டிவைத்துள்ள தனது மருத்துவமனைக்கு, கிளினிக்குக்கு போய்விடுகிறார்கள். சுக பிரசவம் ஆகும் பெண்களை கூட ஆப்ரேஷன் என பணத்துக்காக வயிற்றை கிழிக்கும் மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகிவருகிறார்கள். இதை பயிற்சியின் போதே இளம் மருத்துவர்களும் கற்றுக்கொள்கிறார்கள். 

இதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களாகவும், தனியாக கிளினிக் வைத்தும் நடத்துகிறார்கள். அங்கு பொண்டாட்டியை கவனித்துக்கொள்வதை போல நோயாளியை கவனித்துக்கொள்ளும் நீங்கள் அரசு மருத்துவமனையில் ஏன் அதை செய்வதில்லை?. ஏன் செய்வதில்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு போனாலும் போகாவிட்டாலும் வங்கி கணக்கில் சம்பளம் சேர்ந்துவிடும். தனியாரில் ஒரு நோயாளி நன்றாக கவனிக்கிறார் என சர்டிப்கெட் தந்தால் மட்டும்மே உங்கள் கணக்குக்கு பணம் வரும். 

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையிலோ, தனியாக கிளினிக் வைக்கவோ, சிறப்பு மருத்துவராக பணியாற்றவோ அரசாங்கத்தில் அனுமதியே கிடையாது. ஆனால் மருத்துவர்களின் அரசின் விதியை மீறுகிறாhகள் என தெரிந்தும் அரசு கண்டுக்கொள்வதில்லை. காரணம், இவர்களை பகைத்துக்கொண்டால் வேலை நிறுத்தம், போராட்டம் என இறங்கிவிட்டால் உயிர், உடல் நிலை விவகாரத்தில் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசாங்கங்கள் அடங்கி ஒடுங்கியே கிடக்கிறது. இதனால் துன்பப்படுவது மக்கள் தான். 

ஒரு மருத்துவரை மனைவி மேல் அன்பு கொண்ட ஒருவன் மனைவியை கொண்றவர் என காரணம் கற்பித்துக்கொண்டு கொலைசெய்துவிடுகிறான். அதை கண்டிக்கிறோம் என மக்களுக்கு மருத்துவம் பார்க்காமல் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் செய்ததை கொலை என்பதா இல்லை விபத்து என்பதா. இதற்க்கு மருத்துவர்கள் தான் பதில் தர வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அலைக்கழிப்பதும், தனியார் மருத்துவமனையில் அநியாயத்துக்கும் பணம் பிடுங்குவதை மக்கள் ஆத்திரத்தோடு கவனித்துக்கொண்டு தான் உள்ளார்கள். நிச்சயம் இது ஒருநாள் வெடிக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக