வெள்ளி, ஜனவரி 13, 2012

பானை போய் குக்கர் வந்தது டும் டும் டும்.....................



பொங்கல் பண்டிகை வருகிறது என்றாலே 10 ஆண்டுகளுக்கு முன்பு  மார்கழி மாதம்மே பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகிவிடுவார்கள்.

நான் டவுசர் போட்ட பையனாக இருந்தபோது அப்பா, அம்மா, நான் என மூவரும் மண் சட்டி, அன்னக்கூடையுடன் செம்மண் பூமிக்கு செல்வோம். அங்கே தெருவாசிகள் பலர் எங்களுக்கு முன் மண் அள்ளிக்கொண்டுயிருப்பார்கள். அப்பா நல்ல மண்ணாக தோண்டி நிரப்பி தர அதை கொண்டு வந்து வீட்டின் முன் கொட்டுவோம். பொங்கலுக்கு 20 நாளைக்கு முன்பே அந்த மண்ணை சளித்து புது தரைப்போடுவார் அம்மா. அந்த தரையை நாய், மாடு மிதித்துவிடாமல் இரவு பகல் என பாதுகாப்பார்.

தரைபோட்டபின், அடுத்து வீட்டின் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்க வீடு சுத்தம் செய்யப்படும். வீட்டின் கூரையில், அடுக்கி வைக்கப்பட்ட பானைகளில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து மறந்து போன 10 ரூபாய் தாள்கள், அதிரசம், முறுக்கு போன்றவை தூசு படிந்து கிடக்கும். மறந்துபோன அந்த காசுக்காகவே அம்மா விடு சுத்தம் செய்யனும் எனும்போதே நான் உதவறன்ம்மா என ஓடிவந்து நிற்பேன். வீடு சுத்தம் செய்யும்போதே போகிக்காக காத்திருக்காமல் பழையதை அப்போதே கொளுத்திவிடுவோம்.

பொங்கலுக்கு பத்து தினங்களுக்கு முன்பே பொங்கலுக்கு வீட்டின் பானையில் சேமித்து வைத்திருந்த நெல்லை குத்தி அரிசியாக்கி வைப்பார். அப்படியே பக்கத்து வீட்டு அக்கா, பெரியம்மா, அண்ணி, சித்திக்களுடன் அம்மா குழவன் வீட்டுக்கு சென்று போகி பொங்கல்க்கு 1 பானை, தை பொங்கல்க்கு 1 பெரிய பானை, 1 சின்னபானை, 2 சட்டி, மாட்டுப்பொங்கல்க்கு 1 பானை, கன்னு பொங்கல்க்கு 1 பானை என வாங்கிக்கொண்டு நடந்து வருவது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

போகியன்று நிலத்தில் போய் பொங்கல் வைத்துவிட்டு வந்து மறுநாள் வரும் தை பொங்கலை வரவேற்க்க களிமண் கரைசலில் புது தரையில் லைன்போட்டு அதற்க்குள் சுண்ணாம்பில் கோலம்போடுவார். நீண்ட நாட்களுக்கு அழியாமல் இருக்கும் அது.

நள்ளிரவை தாண்டியும் அக்கம் பக்க வீடுகளில் உள்ளவர்களுடன் கதை பேசிக்கொண்டே அம்மா கோலம்போட நாளை புது டிரஸ் போடலாம் என்ற சந்தோஷத்தில் தூங்கியிருப்பேன்.

தை பொங்கலன்று விடியற்காலையே அம்மா எழுப்பி சுடுதண்ணியில் குளிக்க வைத்து புத்தாடை போடவைப்பார். குளிக்கும் நேரத்தில் அப்பா பூமி தாயை வேண்டிக்கொண்டு பொங்கல் வைக்க பள்ளம் தோண்டி அந்த மண்ணில் உருண்டை பிடித்து பள்ளத்தின் இரண்டு புறமும் அதை வைத்து அதன் மேல் பானையை எடுத்து வைத்து காய்ந்து போன துவரம் செடியை அடுப்பில் போட்டு தீ வைப்பார்.

குளித்துவிட்டு புது துணியுடன் வரும் என்னிடம், அடுப்பு அணையாம பாத்துக்க என அடிப்பின் அருகில் உட்கார வைப்பார். தை மாத குளிர்க்கு இதமாக அதை எரியவைத்துக்கொண்டு இருப்போம். சூரிய உதயம் தொடங்கும்போது பானையில் பொங்கல் பொங்கும். முன்னாடியே அம்மா சொல்லிவிடுவார் பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல்ன்னு கத்தனம்ன்னு பொங்கும் போதே பொங்கலோ பொங்கல் என குரல் கொடுக்கும்போது அடுத்தடுத்த வீடுகளும் அதே குரல் கேட்கும். அன்று மதியமே எங்கவீட்ல தான் முதல்ல பொங்கல் பொங்குச்சி இல்லயில்ல எங்க வீட்ல தான் முதல்ல என என் வயது பிள்ளைகளுக்குள் சண்டை நடக்கும்.


காலமாற்றம் 10 ஆண்டுகள் பொறுத்து அதே விவசாயின் மகனாக பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என ஆராய்ந்தபோது அதிர்ச்சியாகதான் இருந்தது. நாளை பொங்கல் பண்டிகை. அதற்கான அறிகுறியே எங்கள் சுற்றுவட்டார பகுதியில் காணோம். சில வீடுகளின் முன்தான் புத்தம் புது தரையிருந்தது. பல கிராமங்களிலும் இதே நிலைதான். எதுக்கு புதுசா தரை போட்டுக்கிட்டு, பெயின்ட் அடிச்சிக்கிட்டு, பானை வாங்க போன குதிரை விலை சொல்றான். பொங்கல் வைக்க அடுப்பு தோண்டனும், நல்லாயிருக்கற தரைய யாராவது தோண்டுவாங்களா. அதான் குக்கர்ல பொங்கல் வச்சி படைக்க போறன் வேலை மிச்சம் பாரு என்றார்கள் தொலைக்காட்சியில் ஊரிப்போன தமிழச்சிகள்.

எவ்வளவு பெரிய மாற்றம். தங்களது வசதிக்காக, சவுகரியத்துக்கு கொண்டாடுவதாக மாறியுள்ளது தமிழனின் கலாச்சார, பண்பாட்டு பண்டிகையான பொங்கல் பண்டிகை.

தமிழனையும், உழவனையும் மதியதாக நாட்டில் பொங்கல் பண்டிகையை மற்றவர்கள் மதியாமல் போனதில் அதிர்ச்சியில்லை. ஆனால் அவனே அதை அசிங்கமாக, அவமானமாக நினைக்கும் போக்கை என்னவென்று சொல்வது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக